மகாபாரதத்தில் குறிப்பிடத்தக்க வீரன்...
யுயுத்சு : -
யுயுத்சு மஹாபாரதத்தில் ஓர் குறிப்பிடத்தக்க வீரர். ஒரு சமயம் வியாச முனிவர் திருதராஷ்டிரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். வியாச முனிவரை உபசரிக்கும் பொறுப்பை மனைவி காந்தாரியிடம் திருதராஷ்டிரர் ஒப்படைத்தார். அவளுடைய உபசரிப்பில் மகிழ்ந்த முனிவர், விடை பெற்றுச் செல்லும் முன், காந்தாரியின் வேண்டுகோளின் படி, மக்கட் செல்வம் பெறும் வரத்தை அருளினார். பின் காந்தாரி கர்ப்பம் தரித்தாள்.
கர்ப்பகாலம் இரண்டு வருடங்கள் நீடித்தது. அவள் நிலை கண்டு அனைவரும் கவலையுற்றனர். காந்தாரி கர்ப்பமாக இருக்கும் போது திருதராஷ்டிரருக்குத் தேவையான பணிகளைச் செய்துக் கொடுக்க சுகதா என்னும் பணிப்பெண் நியமிக்கப்பட்டாள். அவள் காந்தாரியின் உற்ற தோழியும் ஆவாள். ஆனால் திருதராஷ்டிரரோ அவளுடைய அழகில் மயங்கி தன்னுடைய பணிக்கும், உடல் தேவைக்கும் அவளைப் பயன்படுத்திக் கொண்டார்.
திருதிராஷ்டிரருக்கு, காந்தாரி மூலம் 100 மகன்களும், துஷலா என்னும் பெண் குழந்தையும் பிறந்தனர். பணிப்பெண் சுகதா மூலம் ஒரு ஆண்மகன் பிறந்தான். அவன் தான் யுயுத்சு. யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது. இருவருமே தாசியின் புத்திரர்கள். அறிவு மிகுந்த இவ்விருவரும் யுதிர்ஷ்டரிடத்தில் அன்பும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்களாக இருந்தனர். பாண்டவரிடத்தில் அபிமானம் உள்ளவர்கள்.
கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும், யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான். துரியோதனனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான். குருசேத்ர யுத்தத்திற்காக, தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட் படை எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன. இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்.
அந்நேரத்தில், அர்ச்சுனன் கிருஷ்ணரை நோக்கி, நூறு கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தானே கண்ணா?’’ என்றான். கண்ணன் கலகலவென நகைத்தான். ‘‘நூறு கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பது சரியல்ல, அர்ச்சுனா! கௌரவர்களில் நூறுபேர் அழிக்கப்படுவார்கள் என்பதே சரி,’’ என்று புதிராக பதில் சொன்னான். இவர்கள் இப்படி உரையாடிக் கொண்டிருந்த போது, தர்மபுத்திரன் யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து நின்றார். ஏதோ முக்கியமாக ஒன்றை அறிவிக்கும் நோக்கில் வந்திருக்கிறார் என்பதை அவர் நின்ற தோரணையால் இருதரப்பும் அறிந்தனர்.
இரு தரப்பு வீரர்களும் அமைதி காத்தனர். துரியோதனன் தர்மரையே வெறித்துப் பார்த்தவாறு அவரது அறிவிப்பைக் கேட்கக் காத்திருந்தான். தர்மர் ஒரு அறிவிப்பை உரத்துச் சொல்லலானார்: “வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்க இருக்கிறது. இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம். துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்”
வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம் என்றார். மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கலாகாது. அப்படி அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள்.’’ எனக் கம்பீரமாக அறிவித்து விட்டு தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.
அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தர்மனின் அறிவிப்பைக் கேட்டு வியந்தார்கள். தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது. கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது. அதில் இருந்தவன் யுயுத்சு என்பதை பீஷ்மர் அறிந்தார். யுயுத்சுவை நோக்கி துரியோதனன் வில்லை வளைத்தபோது , பீஷ்மர் “துரியோதனா, சற்றுப் பொறு!’’ என்று குறுக்கிட்டார். ‘‘அவனைப் போகவிடு. தர்மபுத்திரன் கட்சி மாறுபவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கலாகாது என்றானே? அந்த வீரன் அவன் மனச்சாட்சிப்படி நடக்கிறான். நீ அவனை போகவிடு. நம் படை, அவன் ஒருவனை இழப்பதால் எந்த வகையிலும் வலிமை குன்றப் போவதில்லை.
நம்மிலிருந்து வேறுபட்டுப் பாண்டவர் அணியில் சேர்ந்த வீரனை போர் தொடங்கியதும் நம் வீரர்களில் ஒருவனாலேயே கொல்லப்படுவான்!
அதுவே அவனுக்கான நமது தண்டனை!’’ என்றார் பீஷ்மர். அவர் சொன்னதைக் கேட்டு துரியோதனன், அம்பைத் தன் அம்பறாத் தூணியில் செருகிக் கொண்டான். யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி. அதிரதி என்பவன் ஒரே சமயத்தில் 60,000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.
அர்ச்சுனா, யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’ என்றான் கண்ணன். நம் அணிக்கு வரும் இவனை நீயும் அறிவாய். நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஒருமுறை பீமனை கொல்ல துரியோதனன் நீரில் நஞ்சு கலந்து கொடுக்க முற்பட்டானே, அப்போது அதை முன்கூட்டியே பீமனுக்குத் தெரிவித்து பீமன் உயிரைக் காத்தவன் இவன்தான்.
இவன் தர்மநெறியிலிருந்து சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு. இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என கிருஷ்ணர் உரைத்தார். முதல் நாள் போர் நடந்து முடிந்தது. மறுநாள் காலை போரில் மீண்டும் சந்திப்போம் என்று முழக்கமிட்டு, கௌரவர்களும், பாண்டவர்களும் அவரவர் பாசறைக்குத் திரும்பினார்கள்.
பாண்டவர் அணியில் புதிதாய்ச் சேர்ந்த கௌரவ வீரனைத் தன்னுடன் அணைத்து அழைத்துக் கொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணன். உண்மையான தர்மம் எங்கிருக்கிறதோ அதை உணர்ந்து கட்சி மாற விரும்புகிறவர்கள் மாறலாம் என்ற தர்மனின் அறிவிப்பைக் கேட்டு இன்று காலை நம் கட்சிக்கு மாறிவிட்டான் இவன்!’’ என்றான் கண்ணன். அப்படியே புதியவனின் தலையை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தான்.
யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.
தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார். அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ என்று அர்ச்சுனன் கேட்டான் .‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.
மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’ எனக் கூறினார் கிருஷ்ணன். யுதிஷ்டிரர் யுயுத்சுவை இழுத்து அணைத்துக் கொள்ள, பிற பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக்கொடுத்தார்கள். கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது. திருதராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு அந்திம கடனை செய்தான். போரில் வென்ற பின், இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் தர்மர் .
அர்ச்சுனனின் பேரன் பரீஷத்திற்கு தகுந்த வயது வரும் வரை, அரசனாக நல்லாட்சி புரிந்து, அரசை பரீஷத்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
#மஹாபாரதம் #மஹாபாரதம் #மஹாபாரதம்### #மஹாபாரதம் @ mahabharatham :: #மஹாபாரதம்