ஸ்ரீ நரசிம்ம பெருமாள்
513 Posts • 2M views
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 13 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்* கண்ணன் காட்டிய வழி! இரண்டு வகைகளிலும் தவறிழைத்துவிட்டான் ஹிரண்ய கசிபு என்று பார்த்தோம். இந்தப் பிரஹ்லாதனும் ஒரு தப்பு செய்தான். அந்தத் தப்பு என்ன தெரியுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கீதாசார்யன் கீதையில் சொன்னதைத் திருப்பிச் சொன்னதுதான் அவன் செய்த ஒரே தப்பு. கண்ணன் கீதையில் என்ன சொன்னான்? ‘என்னால் எல்லா ஜகங்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றன. ஜகங்களை நான்தான் தாங்குகிறேன்’ என்றான் அல்லவா? அதைத்தானே குழந்தை அப்படியே திருப்பிச் சொன்னான்! அதுதான் அவன் செய்த தப்பு. கண்ணன் சொன்னதைத் திருப்பிச் சொல்வது தப்பு என்று இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறோம். கீதையில் கண்ணன் சொன்னதுதான் தவறாகுமா அல்லது அதை மறுபடியும் பிரஹ்லாதன் சொன்னதுதான் தப்பாகுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற மகனைக் காய்ந்து… என்கிறார் ஆழ்வார். மகன் மீது ரொம்பவும் கோபப்பட்டானாம். வியாக்யானம் செய்கின்ற பெரியவாச்சான் பிள்ளை என்கின்ற பெரியவர், ‘மகன் என்றும் சொல்கிறார் பிள்ளை என்றும் சொல்கிறாரே ஆழ்வார். யாருக்கு மகன் யாருக்குப் பிள்ளை என்று கேள்வி எழுப்புகிறார்?’ ஏற்கனவே ஹிரண்யகசிபுவுக்குப் பிள்ளையாக இருந்தானாம். கண்ணன் எங்கும் உளன் என்று பிரஹ்லாதன் சொன்னவுடன், அவன் என் பிள்ளை இல்லை என்று தள்ளிவிட்டானாம் ஹிரண்யகசிபு. உடனே பார்த்தார் நம்மாழ்வார். ‘ஹிரண்யன், தன் மகன் இல்லை என்று சொன்னால் உடனே, பிரஹ்லாதனை என் பிள்ளையாக ஸ்வீகாரம் செய்துகொண்டு விடுகிறேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டாராம். ஹிரண்யகசிபு தன் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானானால், கதையைக் கேட்கும் நாம் ஒவ்வொருவரும், நம் பிள்ளையாக பிரஹ்லாதனை நினைக்க வேண்டும். பகவானை பந்து என்று, எவன் ஒத்துக் கொண்டாலும் அவன் நமக்கும் உறவு. அவனை பந்து இல்லை என்று எவன் சொன்னாலும், அவன் நமக்கும் பந்து இல்லை. இப்படி இருப்பவன்தான் ஸ்ரீவைஷ்ணவன்… பாகவதோத்தமன். பிரஹ்லாதன் மீது ஆயுதங்களையெல்லாம் ஏவிவிட்டார்கள். ‘இந்த ஆயுதங்களுக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால் எனக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால், இவை என்னை எதுவும் செய்யாமல் போகட்டும்’ என்று பிரார்த்தித்தான் பிரஹ்லாதன். அவனை அந்த ஆயுதங்கள் ஒன்றுமே பண்ணவில்லை. உடைந்து போயின. எந்த சிரமமும் குழந்தைக்கு ஏற்படவே இல்லையாம். பொதுவாக நாகாஸ்திரத்துக்கு (ஸர்ப்பத்துக்கு) எது பிரதி அஸ்திரம் என்று பார்த்தால், கருடாஸ்த்திரம். வருணாஸ்திரத்துக்கு பிரதி அஸ்திரம் ஆக்னேயாஸ்திரம் (அக்னி). இப்படி ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் ஒரு பிரத்யஸ்திரம் உண்டு. மகாபாரத யுத்தத்தில், அர்ஜுனன் பேரில் நாராயணாஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணிவிட்டான் பகதத்தன். நாராயணாஸ்திரத்துக்குப் பிரத்யஸ்திரம் என்னவென்று அர்ஜுனன் தெரிந்துகொண்டது கிடையாது. எதைப் பிரத்யஸ்திரமாகப் பண்ணலாம் என்று கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் கேட்டான். கண்ணன் சொன்னான்: தவறான ஆராய்ச்சி பண்ணுவதற்கு இறங்கியிருக்கிறாய் அர்ஜுனா. நாராயணனுக்குப் பிரதி இருந்தாலல்லவா அவன் அஸ்திரத்திற்குப் பிரதி இருப்பதற்கு? “அப்படியானால் அவ்வளவுதானா? நான் வில்லைக் கீழே போட வேண்டியது தானா?” என்று பதறினான் அர்ஜுனன். இதற்குத்தானா நான் இத்தனை பாடுபட்டேன்?” என்று கேட்டான் கிருஷ்ணன். உன்னை விட்டுவிட்டுப் போவதற்காக நான் இவ்வளவெல்லாம் செய்யவில்லை என்றாராம். நாராயணன் அஸ்திரத்துக்கு பதிலாக, பிரதியாக நம்மிடம் பெரிய அஸ்திரம் ஒன்று உள்ளது. அதை ஒன்றும் வசிஷ்டரிடத்திலோ அல்லது விஸ்வாமித்திரரிடத்திலோ போய்க் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்பதில்லை. நமக்கே தெரியும் அந்த அஸ்திரம் என்னவென்பது. இதைப் பற்றி அர்ஜுனனுக்கு உபதேசித்தான் கண்ணன். கிரீடத்தைக் கழற்று. கீழே வை. காண்டீபத்தைக் கீழே போடு. கவசத்தைக் கழற்றிக் கீழே வை. பாதுகையைக் கழற்று. மண்டியிட்டுக்கொண்டு கையைக் கூப்பிக்கொள்! அஞ்சலி பண்ணு. அது ஒன்றுதான் அதற்கு பிரதி அஸ்திரம். நீ கை கூப்பும் செய்கையைச் செய்துவிட்டாயானால், நாராயணாஸ்திரம் உன்னை எதுவும் பண்ணாது. அஞ்சலி ஒன்றுதான் அதற்குப் பிரத்யஸ்திரமாகும்.” ஸ்வாமி வேதாந்த தேசிகன் இப்படி வணங்குவது பற்றி, ‘அஞ்சலி வைபவம்’ என்ற ஒன்றையே செய்திருக்கிறார். விசேஷமான நூல் அது. பகவானே நீயே என் பேரில் அஸ்திரத்தைத் தொடுத்துவிட்டாயானால், இனிமேல் நான் கவலைப்படப் போவதில்லை. இப்போது புரிந்துகொண்டுவிட்டேன், சூட்சுமம் என்ன, ரகசியம் என்ன என்று! கையைக் கூப்பிவிட்டால் உன் அஸ்திரம் என்னை ஒன்றும் பண்ணாது. ஆக உன்னுடைய நிக்ரஹாஸ்திரம் என்னும் அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தினால், அதற்கு நான் பிரத்யஸ்திரம் வைத்திருக்கிறேன். அதுதான் கைகூப்பு செய்கை” என்றான் அர்ஜுனன். நம் பிரஹ்லாதன்தான் எப்போதும் கைகூப்பிக் கொண்டே இருக்கிறானே. அவனை எந்த அஸ்திரமும் எதுவும் செய்யவில்லை. அவை வீழ்ந்தும் மாய்ந்தும் போயின. பிரஹ்லாதனைப் பார்த்து ‘இவனுக்கு பயமே ஏற்படவில்லையே’ என்று ஹிரண்யகசிபு நினைத்தான். ஏதோ சஸ்திரத்திலே ஜெயித்துவிட்டாய். என் காலில் விழுந்து கேள். நான் உனக்கு அபயப் பிரதானம் பண்ணுகிறேன். பயமில்லாமல் இருப்பதற்கு உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். பிரஹ்லாதா என் காலில் விழு” என்று கேட்டான் ஹிரண்யகசிபு. பாலப்பிரஹ்லாதன் சிரித்துக்கொண்டே சொன்னான். “நான் என்னமோ ஏற்கனவே பயப்பட்டாற்போலேயும், உன் காலில் விழப்போகிறேன் என்று சொன்னாற்போலேயும் சொல்கிறீர்களே? நீங்கள் தகப்பனார் என்பதற்காக, நான் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக பயந்துபோய்க் காலில் விழமாட்டேன். நான் ஒருநாளும் பயந்தது கிடையாது. ஏன்? பயங்களையெல்லாம் போக்குபவனான கண்ணன் என் மனத்திலே இருக்குங்கால் பயப் பிராப்தி எனக்குக் கிடையவே கிடையாது.” தைத்ரிய உபநிஷதம் சொல்கிறது, ‘பகவானுக்கு அருகிலே போகப்போக, பயம் நம்மிடத்திலிருந்து விலகிவிலகிப் போய்விடும். அவனை விட்டுப் பிரியப்பிரிய, பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.’ முன்பெல்லாம் பெரியதாய் ஒரு வீடு இருக்கும். எல்லோரும் தரையில் உள்ள தளத்திலேயே இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. மாடிமாடியாக வீடுகள் கட்டிக் கொண்டே போகிறார்கள். ஏன் அப்படியாம்? ஒருவர் சொன்னார்; ‘பயம் ஏற ஏற மாடி ஏறுமாம்.’ பகவானுக்கு அருகில் போகப்போக நமக்கு பயம் வராது. முன்பெல்லாம் வாசலில் கட்டில் போட்டுக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த காலம். அப்போது பெருமானுக்கு அருகில் இருந்தோம். இப்போது அவனிடமிருந்து விலகி விலகிப் போகிறோம். பயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாசலில் வருவதற்கு பயமாக இருக்கிறது. எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது. பகவானுக்கு அருகில் போனால்தான் பயம் வராமல் இருக்கும். ‘மாடமீமிசைக் கஞ்சன்’ என்று பாட்டு. அந்தக் கம்சனைத்தான், கண்ணன் கீழே இழுத்து வந்து தள்ளினான். கம்சன் ஏன் மேலே ஏறி உட்கார்ந்தான்? கிருஷ்ணரிடத்தில் அன்பிருந்திருந்தால் கீழே இருந்திருப்பான். அன்பில்லை. பயம் ஏற்பட்டு விட்டது. அதனால், மாடியின் மீது ஏறி உட்கார்ந்துவிட்டானாம் கம்சன். (வைபவம் வளரும்) 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #புராண கதைகள் #பக்தி கதைகள்
18 likes
11 shares
*நரசிம்மர் ஆலயங்கள் 08* *சோளிங்கர் நரசிம்மர்* *ஆலயம்* சென்னையில் இருந்து 100 கல் தொலைவிலும் வேலூரில் இருந்து 50 மைல் தொலைவிலும் அமைந்திருக்கும் ஆலயம் . காஞ்சிபுரத்துக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், மகா விஷேஷமான ஆலயம் வைஷ்ணவ திவ்யதேசங்களில் இது 65ம் தலம் மகா புண்ணியமானது. வடமொழியில் "பிரம்ம கைவர்த்த புராணத்தில்" இதன் சிறப்புக்கள் சொல்லபட்டிருக்கின்றன நரசிம்ம ஆலயங்களில் தொன்மையானது இதுதான், இதன் வரலாறு சப்தரிஷிகளிடம் இருந்து துவங்குகின்றது பகவானின் அவதாரங்களில் உடனே நடந்து மின்னல் வேகத்தில் பலன் கொடுத்தது நரசிம்ம அவதாரம், எவ்வளவு பெரிய இக்கட்டில் ஒருவன் சிக்கினாலும் இனி தப்பவே முடியாது என பெரும் நெருக்கடியில் வீழ்ந்தாலும் அங்கு ஓடிவந்து அவனை காக்கும் அற்புதமான சக்தி நரசிம்ம அவதாரத்துக்கே உண்டு நாளை வா என்றோ பின்னர் தருகின்றேன் என்றோ சொல்லாமல் நினைத்த மாத்திரம் வந்து வரமருளும் நரசிம்ம மூர்த்தியினை அதுவும் அதுவேண்டுமா இதுவேண்டுமா என கேட்காமல் இதுதானே வேண்டும் என செயலில் காட்டும் அவதார மூர்த்தியினை தரிசிக்கும் விருப்பம் சப்தரிஷிகளுக்கு உண்டாயிற்று அதுவும் உக்கிர நரசிம்மரை தவிர்த்து தங்களை போல் தவக்கோலத்தில் அமைதியாய் உலகை இயக்கும் கோலத்தில் இருக்கும் யோக நரசிம்மரை காண விரும்பினார்கள். வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் என ஏழுபேரும் மிகுந்த தவமிருந்து பகவானின் யோக நரசிம்ம‌ காட்சியினை ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் கண்ட தலம் இது பிரகலாதனை காக்க பகவான் வந்து நின்ற நேரம் ஒரு கடிகைதான் அது 24 நிமிடம் என வரையறுக்கபடும் . பழைய கால நேர அளவு, கடிகாரம் எனும் சொல் இதில் இருந்துதான் வந்தது இவ்வாறு 24 நிமிடங்கள் அந்த சப்தரிஷிகள் பகவானை மனதார கண்ணார தரிசித்த தலம் இது. அப்படியே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பகவானும் இங்கு வந்து தன்னை 24 நிமிடம் தரிசிப்போர்க்கு முக்தி என திருவுளம் பற்றிய தலமும் இதுதான். ஆம், இத்தலத்தில் 24 நிமிடங்கள் தரிசித்தால் முக்தி. இங்கு எந்த காணிக்கை வேண்டாம், நேர்ச்சை வேண்டாம், மந்திர வழிபாடு யாகம் என எதுவும் வேண்டாம், 24 நிமிடங்கள் அவர் சன்னதியில் நின்றால் எல்லா தோஷமும் சரியாகும் மனதில் எண்ணியது பலிக்கும். இத்தலம் மிக பழமையானது . கடிகாசலம் அதாவது கடிகைமலை என அழைக்கபட்டது. பின் சோழர்கள் ஆட்சியில் இது சோழபுரமாகி பின் சோழிங்கர் என்றாயிற்று சோழி என்றால் காவல், கவசம் எனும் பொருளும் உண்டு. எல்லோருக்கும் காவல் தரும் நரசிம்மரின் தலமாதனால் சோழிங்கர் என்றாயிற்று என்பதும் ஒரு கோணம் இந்த தலம் இரு கோவில்களை கொண்டது மலையடியில் உற்சவராக பக்தவச்சலம் எனும் பெயரில் சுதாவல்லி, அமிர்தவல்லி என இரு தேவியரோடு எழுந்தருளியிருக்கின்றார். மூலவர் மலை மேல் ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். பக்தவத்சலம் என்றால் பக்தர்மேல் அன்புகொண்ட பெருமாளின் மலை என பொருள். 1035 படிகள் கொண்ட மலைபாதையில் கோவிலுக்கு செல்லும் வழியில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமர் சிலையினை காணலாம். அம்முனிவர்கள் தவமிருந்தபோது காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் அட்டகாசம் செய்தார்கள். அவர்களை தடுக்க அனுமனுக்கு தன் ஆயுதங்களை கொடுத்து பகவான் அனுப்பினார் என்பது புராண செய்தி. பகவானே இங்கு தன் பக்தர்களை அனுமனுடன் காக்கின்றார் என்பது இதன் தாத்பரியம். இந்த ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. மலையில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளதாக ஆலயம் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். அனுமன் காவல் காப்பதால் இங்குள்ள குளம் அனுமன் தீர்த்தமாயிற்று. இதில் நீராடுவது நல்ல பலனை தரும். இது மிக தொன்மையான தலம் என்பதாலும், பகவானே யோக நிலையில் இருப்பதாலும் ஆழ்வார்களெல்லாம் மங்கள சாசனம் செய்தார்கள். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. நம்மாழ்வார் தவிர பல ஆழ்வார்கள் வந்து பணிந்த ஆலயம் இது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்து வணங்கி அருள் பெற்றது வரலாறு. வைகுண்டம், திருபாற்கடல், திருவேங்கடத்துக்கு இணையாக போற்றபடும் தலமும் இதுதான். இங்கு வேண்டி கொண்டால் 24 நிமிடம் அமர்ந்து பகவானை மனமொன்றி தியானித்தால் எல்லா சிக்கலும் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். தொழில் வளரும் பெரும் வாழ்வு கிட்டும் இங்கு சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டி குடியேற விரும்புவோர் செய்யும் வினோத வழிபாடு ஒன்று உண்டு. அதன்படி மலைக்கு செல்லும் வழியில் கிடக்கும் கற்களை எடுத்து சென்று கோவில் முன் கல்லின் மேல் கல் அடுக்கி வழிபடுவார்கள். அந்த வழிபாடு நிச்சயம் சொந்தவீட்டை கொடுக்கும். இதற்கு சாட்சிகள் ஏராளம் இங்கு நரசிமம்ம தீர்த்தம் உண்டு. அது விஷேஷம் இங்கு நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் இந்த தலம் பாற்கடலுக்கும் வைகுண்டத்துக்கும் ஈடானது என்பதால் இங்கு தான தர்மம் செய்வதும் இதர வழிபாடுகளை செய்வதும் கயாவில் செய்வதற்கு ஈடானது. சில துண்டு கற்கண்டுகளுக்கும், ஒரு கட்டி வெல்லத்துக்கும், வாழைபழ நைவேத்தியத்துக்கும் ஓடிவந்து அந்த எளிய பக்திக்கே இங்கு அருள்புரிவார். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். இங்கு வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியை வணங்கினால் எல்லா நலமும் அடையலாம் வேண்டியன கிடைக்கும். இது கயாவுக்கு ஈடான தலம் என்பதால் இங்கு தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் பரம்பரை செழித்து வாழும் வம்சம் தொடரும். மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் பகவானை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும். பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் வரும் தொல்லை நோங்கும். இந்த ஆலய நரசிம்ம பகவானின் கண்கள் 11 மாதம் மூடியிருக்கும். கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பு நடைபெறும், கார்த்திகையில்தான் பகவான் கண்விழிப்பார் என்பதை மிக அழகாக காட்டும் ஏற்பாடு இது. வேறெங்கும் இந்த ஏற்பாட்டினை காணமுடியாது. சோளிங்கர் ஆலயம் சக்தி மிக்கது. நவகிரகங்களால் ஏற்படும் தொல்லை முதல் பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் எல்லா சிக்கலும் தீரும் பலமிக்க எதிரிகள், எப்பக்கமும் பெரும் சிக்கல்கள், உயிராபத்து இதர பெரும் அழுத்தங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் நரசிம்மர் எல்லா விக்னங்களையும் நொடியில் அழித்து உங்களுக்கு காவல் தருவார். இந்த தலம் மன அமைதி தரும் தலம், அம்மலையில் இருக்கும் மூலிகளின் காற்றே பாதி நோயினை தீர்த்து நலமெல்லாம் தரும். வேலூர் பக்கம் செல்லும் போது இந்த சோளிங்கரை தரிசிக்க மறவாதீர்கள். அவருக்கு கல்கண்டும் வெல்லமும் வாழைபழமும் கொண்டு சென்று மனமொன்றி தரிசனம் செய்யுங்கள். நெய்விளக்கேற்றிவிட்டு 24 நிமிடம் அவர் சன்னதியில் அமர்ந்திருங்கள். அது போதும் அது மட்டும் போதும். கருணையே உருவான நரசிம்மம் உங்கள் சிக்கல் எதுவோ, உங்கள் ஆபத்து எதுவோ, எது உங்களை மிரட்டி அஞ்சவைக்கின்றதோ, எது உங்களை மனதால் வாட்டுகின்றதோ அதையெல்லாம் தீர்த்து எல்லா சிக்கலிலும் இருந்தும் உங்களை விடுவிப்பார். இது சத்தியம். பிரம்ம ரிஷியார். 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
28 likes
30 shares