வரலாற்றில் இன்று அக்டோபர் 13
1792 - அமெரிக்காவில், (பழைய) விவசாயியின் பஞ்சாங்கம் முதன்முறையாக வெளியிடப்பட்ட நாள்
தொடக்க காலத்தில் பஞ்சாங்கம் என்பது காலநிலையைப் பற்றிய தகவல்களை அளித்து, விவசாயத்திற்கு உதவுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது. அதனால்தான், புதிய நிலப்பரப்பிற்கு(அமெரிக்காவிற்கு) வந்தபின், அந்த மண்ணில் விவசாயத்திற்கு உரிய காலத்தை உணர்த்துவதற்காக இது வெளியிடப்பட்டது. அமெரிக்காவிலேயே பலரும் பஞ்சாங்கங்களை வெளியிட்டதால், மூத்தது என்பதைக் குறிப்பதற்காக, பெயரில் 'பழைய' என்ற முன்னொட்டு 1832இல் சேர்க்கப்பட்டது. பஞ்சாங்கத்தின் வரலாறு, கி.மு.2000களில் தொடங்கிவிட்டது. அதாவது, காலநிலையைப் பபார்த்து விவசாயம் செய்யக் கற்றதும், பொதுவான காலநிலைகுறித்த பதிவுகள், வானியலுக்கும் காலநிலைக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மனிதன் உருவாக்கியதே பஞ்சாங்கம். பருவகாலம் குறித்த முன்னறிவிப்புகள், விதைப்பதற்கான நாள், அலைகள் எழுவுதுபற்றிய குறிப்புகள் உள்ளிட்ட தகவல்கள், நாட்காட்டி வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். அல்மனாக் என்ற ஆங்கிலச்சொல்லுக்கான வரலாறு உறுதியாகத் தெரிவில்லையென்றாலும், நாட்காட்டி என்பதற்கான கிரேக்கச் சொல்லிலிருந்துதான் உருவானதாக நம்பப்படுகிறது. நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நாளைக் கணக்கிட்டு எகிப்தியர்கள் விவசாயம் செய்திருக்கிறார்கள். கோடையின் சூரியத்திருப்ப(சோல்ஸ்டைஸ்) நாளில் இது நிகழுமென்றாலும், 365 நாட்களை மட்டுமே கொண்டிருந்த அவர்களின் நாட்காட்டி, கால் நாளைக் கணக்கிடாததால், இந்த நாளைத் தவறாகக் காட்டியது. இதனால், வானில் தெரியும் நட்சத்திரங்களைக்கொண்டு, இந்நாளை அவர்கள் முடிவுசெய்யத் தொடங்கியது, அவர்களது பஞ்சாங்கத்திற்குத் தொடக்கமாகியது. பருவகாலநிலையை முன்கூட்டி தெரிவித்ததால், எதிர்காலத்தைக் கூறக்கூடியது என்ற நம்பிக்கை ஏற்பட்டதைப் பயன்படுத்தி, ஜாதகத்தைக் கூறுவதாக 12ஆம் நூற்றாண்டில் பஞ்சாங்கம் மாறியது. ஹோரோ-நேரம், ஸ்கோப்பஸ்-கவனிப்பவர் என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து, உருவான ஹாராஸ்கோப்பஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்து ஹாராஸ்கோப் என்ற ஆங்கிலப் பெயர் உருவானது. விவசாயம் என்பது வாழ்வின் அடிப்படையாக இருந்ததால், உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான பஞ்சாங்கங்கள், மாறுபட்ட அமைப்புகள், பெயர்களின் உருவாயின. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து(பஞ்ச) அங்கங்கங்களைக் கொண்டிருப்பது என்ற அடிப்படையில், தமிழில் பஞ்சாங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலநிலை பற்றிய கையேடாக உலகம் முழுவதும் இன்றும் பஞ்சாங்கம் வெளியிடப்படுவதுடன், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களின் நிலைகள் பற்றிய தகவல்கள் ஜிபிஎஸ் அல்மனாக் என்றுதான் அழைக்கப்படுகின்றன.
#வரலாற்றில் இன்று
