தெவிட்டாத விட்டலா - 9
குழந்தையும் தெய்வமும்!
🌼🌼🌼🌼🌼🌼
ரொம்ப சின்ன பெண் ஒருவளை உங்களுக்கு இந்தக் கதையில் அறிமுகப்படுத்துகிறேன்.. அவள் யார்? பெயர் என்ன? அவள் பெற்றோர் யார்? எங்கிருந்து வந்தவள்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாது. பின் என்னதான் தெரியும் என்றால் அவள் பண்டரிநாதன் சந்நிதியிலேயே வசித்தாள் என்ற ஒரே விஷயம் தான். அவன் நிழலில், அவன் தந்த பிரசாதத்திலேயே உயிர் வாழ்ந்தாள். அங்கு ஒலிக்கும் விட்டலன் பஜனையில் தனை மறந்து ஆடுவாள். கூட சேர்ந்து பாடுவாள். இது பல நாள் நடந்தும் ஒருவரும் அவளைப் பற்றி எந்த அக்கறையும் ஆதரவும் விருப்பு வெறுப்போ காட்டவில்லை.
நாமதேவர் பற்றி நிறைய இனி சொல்லப்போகிறேன். பாண்டுரங்கன் என்று சொல்லும்போது நாமதேவர் பெயர் சொல்லாமலே இருக்க முடியாதே. அடிக்கடி பண்டரிபுரத்தில் விட்டலனை தரிசித்துவிட்டு விட்டல நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுபவர். அவர் எப்போதெல்லாம் ஆலயத்தில் இருக்கிறாரோ அன்றெல்லாம் அப்போதெல்லாம் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் ஆனந்த பரவசமாக அவரது நாம சங்கிர்த்தனத்தில், பாடும் அபங்கத்தில், தன்னிலை மறந்து சுகானுபவத்தில் வாழ்வார்கள். மிக சிறப்பாக அமைந்தது அன்று நாமதேவரின் விட்டல் பஜன். மணிக்கணக்காக நடந்த அந்த பஜனை முழுதும் தாளத்துக் கேற்ற வகையில் அந்த சிறுமி ஆடினாள். கூடவே வாங்கி பாடினாள். அவளுடைய பக்தி பூர்வமான ஈடுபாடு நாமதேவரை ரொம்பவே ஈர்த்தது.
பஜனை முடிந்ததும் தன் கையாலேயே அந்த குழந்தையின் சிரசை தடவி அவளுக்கு விட்டலன் பிரசாதம் வழங்கினார்
"குழந்தே, நீ யாரம்மா?"
"நீங்க சொன்ன ஒரு குழந்தை தான்?
"எந்தவூர்?"
"பாண்டுரங்கன் இருக்கும் இடமெல்லாம் என் ஊர். தனியாக எந்த ஊரும் இல்லை"
"உனது பெற்றோர்கள் யார் எங்கிருக்கிறார்கள்?"
"என்னைப் பெற்றவன் பாண்டுரங்கன். அவன் இந்த ஊரில்தான் இருக்கிறான்!"
"உனது வீடு எங்குள்ளது. யாருடன் வசிக்கிறாய்?"
"வீடு இந்த கோவிலே. பாண்டுரங்கனுடன் தான் வசிக்கிறேன்".
"உன் பெயர் என்ன குழந்தே?"
"பாண்டுரங்கன் வைத்த பெயர் ஜனா பாய்"
இந்த சிறு வயதில் இத்தனை பக்தியா?? பிரமித்தார் நாமதேவர்.
"என்னோடு வருகிறாயா? உனக்கு நிறைய நாம சங்கீர்த்தனமேல்லாம் சொல்லித் தருகிறேன்."
"தாரளமாக"
அன்று முதல் ஜனா பாய் நாமதேவர் மகளாக வளர்ந்தாள். நாமதேவருடன் சேர்ந்து பூஜை செய்தாள். அவருடன் பாடினாள் அவர் பஜனைக்கு ஆடினாள். அவரது நிழலாக தொடர்ந்தாள். அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்தாள். அவளது நினைவு, மூச்சு, கனவு எல்லாமே பாண்டுரங்கன், பாண்டுரங்கன், பாண்டுரங்கனே! . இயற்கையிலேயே அந்த இளம் வயதிலும் முதிர்ந்த விட்டல பக்தி கொண்ட அந்த சிறுமியை போற்றினார் நாமதேவர். அவளுக்கு தன்னுடைய பக்தி பூர்வ அபங்கங்கள், பஜனைகள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார் . விட்டலன் அந்த இருவரையும் தன்னிரு கண்களாக பாவித்ததில் என்ன ஆச்சர்யம்?
ஒரு நாள் கொட்டு கொட்டு என்று கொட்டியது மழை. நிற்கவேயில்லை. நாமதேவர் இருந்த மண் வீடு வெள்ளத்தில் மூழ்கி கரையும் நிலை. பாண்டுரங்கனே கொட்டும் மழையில் அவர்கள் இருவரும் வசித்த மண் குடிசைக்கு வந்தான். நாமதேவர் ஸ்ரீமத் பாகவதம் ஸ்லோகங்களை ஒரு சிறு அகல் விளக்கின் ஒளியில் ரசித்து படித்து கொண்டிருந்தார். ஜனா பாய் அதை ஆனந்தமாக கேட்டு கொண்டே ஒரு கல் இயந்திரத்தில் மாவு அரைத்து கொண்டிருந்தாள். அன்று இரவு அந்த மாவில் செய்த ரொட்டியே விட்டலனுக்கு நெய்வேத்யமான பிறகு அவர்களது உணவு. வேறொன்றுமே இல்லை அன்று அந்த ஏழை பக்தர் வீட்டில்.
விட்டலன் வரவால் மண் வீடு கரையாமல் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்படாமல் தப்பித்தது.
"வா பாண்டுரங்கா, வா! எதற்கப்பா இந்த கொட்டும் மழையில் நனைந்து வந்தாய்?"
"என்னவோ உங்களைப் பார்த்து அளவலாவலாமே என்று ஒரு ஆர்வம். மழையை லட்சியம் செய்யவில்லை."
ஒரே ஒரு வஸ்த்ரம் தான் இருந்தது நாமதேவரிடம். அதைக் கொடுத்தார். அதால் தன்னை துடைத்து கொண்ட விட்டலன் தனது ஈர உடையை களைந்து மாற்றுடை ஏதாவது இருக்கிறதா என்று தேடியதில் ஜனாபாயுடைய உடை ஒன்று கண்ணில் பட அதையே உடுத்திக் கொண்டான். ஜனா பாய் பாண்டுரங்கன் வரவால் மிக்க மகிழ்ந்தாள். விட்டலனும் நாமதேவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனா பாய் விட்டலன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏங்கினாள். அவள் மனதை புரிந்து கொண்டவன் போல விட்டலன் எழுந்து அவளிடம் சென்றான். அவளருகில் தரையில் அமர்ந்து அவளிடமிருந்து அந்த கல் இயந்திரத்தை விலக்கி தானே மாவை அரைத்தான். எல்லா மாவும் அரைத்து தீர்த்த பிறகு மூவரும் ரொட்டி தயார் செய்து மிக்க மகிழ்ச்சியோடு பாண்டுரங்கன் அவர்களோடு உணவை பகிர்ந்து கொண்டான்.
விட்டலன் அடிக்கடி அவர்கள் இல்லம் வந்தான். ஜனா பாய் இப்போதெல்லாம் மிக அழகாக பக்தி பூர்வமான அபங்கங்கள் இயற்றினாள். அவள் மனம் எப்போதும் பாண்டுரங்கனோடு ஒன்றி இருந்ததாலும் நாமதேவரின் அருளாலும் பயிற்சியாலும் சிறந்த காவியங்கள் உருவாயின. விட்டலனே அவள் சொல்ல சொல்ல அவற்றை எழுதினான் சில சமயம்.
.
எப்படிப்பட்ட பெண் பார்த்தீர்களா ஜனா பாய்? தனது வாழ்க்கையினால் அவள் நமக்கு சொல்லாமல் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்க முடியும்? எல்லாம் அவனே, அவனன்றி ஒரு அணுவும் இல்லை, இருந்தாலும் அது அவனன்றி இம்மியும் அசையாது, நமக்கு ஏன் ''என்னால் தான் எதுவும் நடக்கும் என்ற எண்ணம்? அவன் நினைப்பதே என் செயல்'' என்ற சரணாகதித்வம் நமக்கு தேவை.
இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
