குருவாயூருக்கு கிருஷ்ணர் வந்த கதை...
திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்ற இடத்தில் புகழ் பெற்ற ஒரு கிருஷ்ணர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த இடம் பூலோக வைகுண்டம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஸ்ரீ கிருஷ்ணபகவான் நிரந்தரமாக வசிப்பதாக ஐதீகம். இங்குள்ள கிருஷ்ணரின் சிலைக்கு நான்கு கைகள் இருக்கிறது. முதல் கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், இரண்டாம் கையில் சுதர்சன சக்கரத்தையும், மூன்றாவது கரத்தில் கௌமோதகி எனப்படும் கதையையும், நான்காவது கையில் தாமரை மலரையும் வைத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இவரை உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன் மற்றும் குருவாயூரப்பன் என்று பல செல்ல பெயர்களில் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு சிவபெருமானால் உருவான ருத்திர தீர்த்தம் ஒன்று உள்ளது. சிவபெருமான் இந்த இடத்திற்கு ருத்ரராக வந்தார். அவர் அங்கு ஒரு குளத்தை உருவாக்கி, இங்கே கிருஷ்ணர் கோயில் வருவதற்கு முன்பே வடக்கு பகுதியில் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தார். இதனால் இந்த குளத்திற்கு “ருத்ர தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த குளத்தில் தாமரை மலர்கள் அதிகம் வளர ஆரம்பித்ததால் இக்குளத்திற்கு தாமரையூர் என்ற பெயரும் இருக்கிறது. அரச வாழ்வை நிரந்தரமாக்கிய ருத்திர கீதம் பிரசேகதன்மார் என்ற அரசர் ஒருவர் இருந்தார். தன் கட்டுபாட்டிலேயே உலகம் இருக்க வேண்டும் என்பதும், எல்லோருக்கும் தலைவனாக தான் ஒருவனே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ருத்ர தீர்த்தத்தில் கடுமையாக தவம் இருந்தார். “தாம் தவம் செய்த அதே இடத்தில் ஒரு பூலோக மனிதன் தவம் செய்கிறானே“ என்று பிரசேகதன்மாரை சிவபெருமான் காண வந்து, “உனக்கு என்ன வேண்டும்?“ எனக் கேட்டார்.
“தான் ஒரு அரசனாக இருப்பினும் உலகில் உள்ள எல்லா அரசுக்கும் தாமே அரசனாக இருக்க வரம் தந்திட வேண்டும். அதாவது நானே அரசனுக்கெல்லாம் அரசன் என்கிற வரம் வேண்டும்” எனக் கேட்டார் பிரசேகதன்மார். அவ்வாறே ஆகுக. ருத்ர கீதத்தை நீ பாடு. ருத்ர கீதத்தை பாடுபவர்கள் சகலத்தையும் அடிமைப்படுத்தும் ஆற்றலை பெறுவார்கள். என்று ஈசன், அரசருக்கு ஆசி கூறி மறைந்தார். அரசரும் அவருடைய பிள்ளைகளும் ருத்ரகீதத்தை தொடர்ந்து பாடி, ருத்ரதீர்த்தத்தில் மூழ்கி ஜபித்து கொண்டு இருந்தார்கள். தமக்கு விருப்பமான ருத்ரகீதம் பாடப்படுவதை கேட்டு, ஸ்ரீமன் நாராயணன், அரசர் பிரசேகதன்மார் முன் காட்சி தந்து, அவர்களுடைய தவத்தை ஏற்று, பிரசேகதன்மாரின் விருப்பத்தை நிறைவேற்றினார். அத்துடன் பல வரங்களையும் அருளினார்.
வைகுண்டத்தில் இருந்து வந்த குருவாயூரப்பன் சிலை இப்போதும் குருவாயூர் கோவிலில் இருக்கிறது. இந்த சிலையானது, ஸ்ரீவிஷ்ணுபகவான் வைகுண்டத்தில் அவரே பூஜித்து வந்தது. பெருமாளுடைய பக்தரான சுதபர் என்ற அரசருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனையில் வருந்தினார். அப்போது வைகுண்டத்தில் பெருமாள், பிரம்மதேவனை அழைத்து, தான் வழிப்பட்டு வரும் சிலையை தந்து, பூலோகத்தில் இருக்கும் என் பக்தனான அரசர் சுதபரிடம் இந்த விக்கிரகத்தை தந்து பூஜிக்க சொல்லுங்கள். அத்துடன் அவருக்கு மகனாக நான் பிறக்கப்போவதாகவும், அதிலும் மூன்று அவதாரம் எடுப்பதாகவும், மூன்று அவதாரத்திலும் அவர்களே எனக்கு பெற்றோராக அமைவார்கள் என்ற செய்தியை சொல்லுங்கள் என்று பிரம்மனிடம் ஸ்ரீமகாவிஷ்ணு கூறினார்.
பிரம்மனும் பூலோகம் வந்து அரசர் சுதபரை சந்தித்து அந்த தம்பதிக்கு ஆசி வழங்கி ஸ்ரீமன் நாராயணனே வழிப்பட்ட விக்கிரகத்தை அவர்களுக்கு தந்து, பெருமாள் வாய்மொழியையும் சொன்னார். இதனை கேட்ட அரச தம்பதியினர் மகிழ்ந்தனர். அன்புடன் பிரம்மன் தந்த விக்கிரகத்தை பூஜித்து வந்தார்கள். அந்த சிலையை வழிபட்டு வந்த பயனால் அரசி விரைவில் கருவுற்றாள். அவளுக்கு பெருமாளே அழகான ஆண் குழந்தையாகப் பிறந்தார். அந்த குழந்தைக்கு பிரச்நிகர்பரை என்று நாமம் சூட்டினர்.
ஸ்ரீமந் நாராயணனின் பிரச்நிகர்பரை என்ற இந்த பூலோக பிறவியில், அவர் உலகத்திற்கு பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகளை கற்றுத் தந்தார். அடுத்த பிறவியில் அரசர் சுதபரையும் அவருடைய மனைவியையும் காஷ்யபர் - அதிதியாக பிறக்க வைத்து, அவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணன், வாமனராக பிறந்தார். தாம் வைகுண்டத்தில் பூஜித்த சிலையை இங்கும் பூஜித்து வந்தார்.
மூன்றாவது பிறவியில் முனிவர் காஷ்யபர், வசுதேவராகவும் அதிதி, தேவகியாகவும் பிறந்தார்கள். அவர்களுக்கு ஸ்ரீமகாவிஷ்ணு, கிருஷ்ணராக பிறந்தார். இந்த பிறவியில் கிருஷ்ணபகவான், அந்த சிலையை துவாரகையில் வைத்து பூஜித்தார். ஆக, வைகுண்டத்திலும், பூலோகத்தின் மூன்று பிறவிகளிலும் ஸ்ரீமன் நாராயணனே பூஜித்ததுதான் இன்றைய குருவாயூரப்பன் கோயில் விக்கிரகம்.
விக்கிரகம் குருவாயூருக்கு வந்தது எப்படி? கிருஷ்ண அவதாரம் முடிந்தது. அவர் மறுபடியும் வைகுண்டத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்தது. அதனால், இத்தனை யுகமாக தாம் வழிபட்டு வந்த சிலையை, மீண்டும் வைகுண்டத்திற்கே எடுத்துச் செல்லலாமா? அல்லது பூலோகத்திலேயே பூஜிக்க வைத்துவிட்டு போகலாமா? என்று சிந்தித்து கொண்டு இருக்கும் போது, கிருஷ்ணரின் தீவிர பக்தனான உத்தவரிடம், “நான் வைகுண்டத்திற்கு செல்ல போகிறேன்.“ என்றார். இதை கேட்டு உத்தவர், மிகவும் வருந்தினார். கவலையில் அழுதார்.
கலங்காதே உத்தவா.. நீ எப்போதும் என் அன்பிற்குரியவர். அதனால் உனக்கு நான் என் அன்பு பரிசாக வைகுண்டத்திலும் மற்ற மூன்று பூலோக பிறவிகளிலும் வழிப்பட்ட விக்கிரகத்தை உன்னிடம் தருகிறேன். நீ அதை பத்திரமாக ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடு. கலியுகத்தில், பூமியில் வாழும் மக்களுக்கும் மிருகங்களுக்கும் பல இன்னல்கள் ஏற்படும். அப்போது இந்த விக்கிரகத்தில் இருந்து அவர்களை நான் காப்பேன். இந்த விக்கிரகத்தின் முன்னே எவர் நின்று என்னை அன்புடன் அழைத்தாலும் நான் வந்துவிடுவேன். என் அன்பான பக்தர்களை அவர்களின் இன்னல்களை தீர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருவேன்.என்று தன் பக்தரான உத்தவரிடம் கூறினார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.
ஸ்ரீமன் நாராயணன் சொன்னப்படி பயபக்தியுடன் துவாரகையில் பூஜித்து வந்தார் உத்தவர். ஒருநாள் மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது துவரகை வெள்ளத்தில் மூழ்கியது. உத்தவர் பூஜித்து வந்த கிருஷ்ணர் சிலை, தண்ணீரில் அடித்துக் கொண்டு ஓர் இடத்தில் மிதந்து சென்றது. அதை குருபகவானும் அவருடைய சிஷ்யரான வாயுபகவானும் கண்டார்கள். அந்த சிலையை கடுமையாக போராடி தண்ணீரில் இருந்து மீட்டெடுத்தார்கள். இந்த விக்கிரகத்தை ஓர் இடத்தில் பத்திரமாக வைத்து பூஜிக்க வேண்டுமே, என்று நினைத்து கொண்டே சிலையை தூக்கிக் கொண்டு பல இடங்களுக்கு சென்றார்கள்.
இவ்வாறு கால்நடையாக தூர பயணத்தை மேற்கொண்டு கேரள மாநிலம் பாலகாட்டுக்கு வந்து விட்டார்கள். அங்கு பரசுராமரை சந்தித்தார்கள். எங்களிடம் கிருஷ்ணரின் விக்கிரகம் இருக்கிறது. அதை எங்கு வைத்து பூஜிப்பது என்று தெரியவில்லை, என்றார் குருபகவான். கவலை வேண்டாம். எல்லாம் அந்த கிருஷ்ணரின் விருப்பப்படியே நடக்கிறது. நீங்கள் என்னுடன் வாருங்கள். தெய்வீக தன்மை கொண்ட ஒரு பகுதி இவ்வூரில் இருக்கிறது என்று கூறிய பரசுராமர், குருபகவானையும், வாயுதேவனையும் அழைத்துக் கொண்டு சென்றார். தெய்வீக தன்மை கொண்ட அந்த இடம்தான் குருவாயூர். அந்த இடத்தில் சிலையை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.
#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #✡️ராசிபலன் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🙏கோவில்
